சோழவந்தான் அருகே கோயில் கும்பாபிஷேக கோலாகலம்

0
53

சோழவந்தான்: சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. குருவித்துறையில் வைகை ஆற்றங் கரையோரம் வரலாற்று சிறப்புமிக்க குருஸ்தலமாக விளங்குவது சித்திர ரத வல்லப பெருமாள் கோயில். இங்கு 5 நிலை 63 அடி உயரமுள்ள புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 12ம் தேதி திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் பட்டாச்சாரியார்கள் ஸ்ரீதர், ரெங்கநாதன், சடகோப பாலாஜி, ராஜா உள்ளிட்ட 63 பட்டாச்சாரியர்களால் 21 யாகசாலை முதற்கால பூஜை தொடங்கப்பட்டு வேத பாராயணங்கள் ஓதப்பட்டது.

தொடர்ந்து 2வது மற்றும் 3வது கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை 5 மணிக்கு 4ம் கால பூஜை தொடங்கி பின்னர் 6.30 மணியளவில் புனித நீர் கலசங்கள் அடங்கிய கடங்கள் புறப்பாடாகி திருக்கோயில் உள்பிரகாரங்களில் வலம் வந்தது. அதன்பின் காலை 6.40 மணியளவில் ராஜகோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து பரிகார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அன்னதானத்தை ராஜகோபுர உபயதாரர்கள் எம்.எல்.ஏ மூர்த்தி, அவரது மனைவி செல்லம்மாள் தொடங்கி வைத்தனர். முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன், உதவி ஆணையர் அனிதா, தக்கார் ராஜசேகரன், செயல் அலுவலர் (பொ) சக்கரையம்மாள், முன்னாள் ஊராட்சி தலைவர் பசும்பொன்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

*