திருமணப் பொருத்தத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

0
91

திருமணம் என்பது இரண்டு மனங்கள் சங்கமிக்கும் நிகழ்வு மட்டுமல்ல. இரண்டு குடும்பங்கள் இணையும் நிகழ்வு. ஒரு புதிய வாழ்வின் தொடக்கம். வேறுபட்ட வாழ்க்கைச் சூழலில் பிறந்து வளர்ந்த இருவர் ஒருமித்த கருத்துடன் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழச் செய்யும் அற்புதப் பிணைப்பு திருமணம். ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் திருமணத்தை, ‘அவசரக் கோலம், அள்ளித் தெளி’ என்பதுபோல் முடித்துவிடக்கூடாது. வழக்கமாக, திருமணத்துக்கு நட்சத்திரப்பொருத்தம் மட்டுமே  முக்கியத்துவம் கொடுத்துப் பார்ப்பார்கள். ஆனால் அது மட்டும் போதாது என்கிறார் ‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்.

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி விரிவாகப் பேசுகிறார் அவர்.

”பொதுவா, ஜாதகம்னு பார்த்தோம்னா லக்னத்திலேருந்து 7- ம் இடம், 8-ம் இடம் இந்த ரெண்டும் நல்லா இருக்கானு பார்ப்பாங்க. அதே மாதிரி மாத்ருகாரகன், சகோதரகாரகன்னு சொல்றமாதிரி களத்திரகாரகன் சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்துல நன்றாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் திருமண வாழ்க்கை அந்தத் தம்பதிக்கு நன்றாக இருக்கும். அதேமாதிரி இரண்டாமிடம்னு சொல்லக்கூடிய தனம், குடும்பம் வாக்குஸ்தானம் நன்றாக பலம் பெற்று இருக்கவேண்டும். இதெல்லாம் நன்றாக இருந்தால்தான் காலாகாலத்துல திருமணம் நடந்து மனமொத்த தம்பதியா வாழ்வாங்க.

பையனுக்கோ பொண்ணுக்கோ வரன் பார்க்கப் போறதுக்கு முன்னாடி அவங்க ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்கா, சர்ப்பதோஷம் இருக்கான்னு? பார்க்குறது நல்லது. அன்றைக்கு அப்படித்தான் ஒருத்தரோட பையன் ஜாதகத்தைப் பார்த்துட்டு, செவ்வாய் தோஷம் இருக்குன்னு சொன்னேன். உடனே அவர், ‘அய்யய்யோ, என் பையன் ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்கா’னு ரொம்பவே ஃபீல் பண்ண ஆரம்பிச்சிட்டார்.

அப்புறம் நான்தான் சொன்னேன். ‘அப்படியெல்லாம் கவலைப்படாதீங்க சார். இந்தக் காலத்துல செவ்வாய்தோஷம் இல்லாத ஜாதகம்தான் அபூர்வமா இருக்கு. அதனால செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷ ஜாதகத்தைச் சேர்த்திடலாம்’னு சொன்னேன். அந்த மாதிரி இருக்கற ரெண்டு ஜாதகங்களைச் சேர்த்து வெச்சோம்னா, அவங்களுடைய மன அலைவரிசைகள் ஒன்றாக இருக்கும். இதே மாதிரி ராகு கேது கிரகங்களின் நிலையையும் கொஞ்சம் பார்க்கணும்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்த்துட்டு, திருமணம் செய்யக்கூடாது. ஒவ்வொரு நட்சத்திரத்துக்குன்னு சில குணாம்சங்கள் உண்டு. ஆனாலும், ஜாதகருடைய லக்னம் என்ன, லக்னாதிபதி எங்க இருக்கார், ஜாதகருக்கு இப்போ என்ன திசை நடக்குது, அடுத்து என்ன திசை வரப் போகுதுன்னு பார்க்கணும். அதை விட்டுட்டு, பரணிக்கு பூசம் பொருந்தும், ரோகிணிக்கு மகம் பொருந்தும்னு பொத்தாம் பொதுவா பார்க்கக் கூடாது.

நட்சத்திரப் பொருத்தம்ங்கிறது ஒரு என்ட்ரி பாயிண்ட். அதாவது அது திருமணப்பொருத்தம் பார்க்கிறதுக்கு ஒரு நுழைவு. ஆனால், அதுவே முடிவாகி விடாது. நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்த்துட்டு தினம், கணம், ரஜ்ஜூனு பத்துக்கு 7 பொருத்தம் இருக்கு, 8 பொருத்தம் இருக்குன்னு முடிவு பண்ணிடக்கூடாது. முக்கியமா போகஸ்தானமான 3-ம் இடத்தைப் பார்க்கணும். தம்பதி இருவரில் ஒருத்தருக்கு தாம்பத்யத்துல ஆர்வம் இருக்கும். இன்னொருத்தருக்கு ஆர்வம் இருக்காது. இன்னைக்கு பெரும்பாலான விவாகரத்துகளுக்கு இதுதான் காரணம் ஆகுது.

ரெண்டு பேர் ஜாதகத்துலயும் போகஸ்தானம்ங்கிற 3-ம் இடம் நல்லா இருக்கான்னு பார்க்கணும்.பொருத்தம் பார்க்கும்போது ‘ராசிப் பொருத்தம்’, ‘யோனிப்பொருத்தம்’ இரண்டும் இருக்கான்னு முக்கியமா பார்க்கணும். அதனால, திருமணப்பொருத்தம் பார்க்கும்போது பத்துப் பொருத்தம் மட்டும் பார்க்காம, ஜாதகருடைய கிரகங்களின் நிலை, தசா புத்தி இதெல்லாம் பார்க்கணும். அதே மாதிரி சனிதிசை நடக்கிற ஜாதகருக்கு  ராகு, கேது, செவ்வாய் திசை நடக்கிற ஜாதகரைச் சேர்க்கக்கூடாது. ராகு திசை நடக்கிறவருக்கு கேது, செவ்வாய், சனி திசை நடக்கிறவரைச் சேர்க்கக்கூடாது. இப்படி தசா புத்தி நல்லா இருக்கான்னும் பார்க்கணும். இப்படிப் பார்த்து சேர்த்திட்டோம்னா அந்நியோன்யமா இருப்பாங்க. குழந்தை பாக்கியமும் உடனே கிடைக்கும். கடைசி வரைக்கும் அவங்களோட வாழ்க்கை வசந்தமா இருக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

*